Friday, January 10, 2014

Sakalakalavalli Malai - Meaning



1) கலைமகளே! ஏழு உலகங்களையும் காக்கும் தொழில் புரியும் நாராயணன் பிரளயக் காலத்தில் அவற்றைக் காப்பதற்காக அவற்றையெல்லாம் உண்டு தன் வயிற்றில் வைத்துக் காப்பாற்றிப் பின் பாற்கடலில் உறங்கி கொண்டிருக்க எல்லாவற்றையும் அழிக்கும் தொழில் புரியும் அண்ணல் சிவபெருமான் பித்தனாய் ஊழித் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்க பிரளயத்தின் முடிவில் மீண்டும் உலகங்களையும் உயிர்களையும் உண்டாக்கும் வண்ணம் பார்த்திருக்கும், படைக்கும் தொழில் புரியும் நான்முகனாம் பிரம்ம தேவன் ஆசையுடன் சுவைக்கும் கரும்பு போன்றவளே! நீ வெண்தாமரையில் வீற்றிருக்கிறாய். அதிலேயே இருக்கிறாயே. என் உள்ளமும் வெள்ளை உள்ளம் தானே? அதையும் ஒரு குளிர்ந்த வெண்தாமரை என்றுக் கருதி உன் பாதத்தை அங்கேயும் வைக்கலாகாதா? என் உள்ளத்திற்கு உன் பாதங்களைத் தாங்கும் பாக்கியம் கிடைக்காதா? உனது அருள் எனக்குக் கிடைக்காதா?

2) கலைமகளே! தாமரை மலர் இருக்கையில் வீற்றிருக்கும் பசும்பொன்னால் செய்யப்பட்டக் கொடி போன்றவளே! பெருத்தக் குன்றினைப் போன்ற கொங்கைகளும் ஐம்பால் காடும் சுமக்கும் கரும்பைப் போல் இனியவளே! நானும் இந்த உலகமும் விரும்பும், பொருட்சுவையும் சொற்சுவையும் தோய்ந்து வரும், நான்கு விதமான கவிதைகளையும் பாடும் பணியில் என்னைப் பணித்தருள்வாய்!

3) என்னைக் காத்து அருளும் செழுந்தமிழாகிய தெளிந்த அமுதினை ஆரவாரத்துடன் உண்டு உன் அருளாகிய கடலில் மூழ்கி எழுந்து உட்குடைந்து குளிக்கும் படி என்று நேருமோ? உள்ளத்தில் ஆழ்ந்து நினைக்க தெளிவினை அள்ளித் தரும் பாடல்களைப் பாடும் புலவர்கள் கவிதை மழை சிந்த அதனைக் கண்டு மகிழும் அழகிய தோகை கொண்ட மயில் போன்றவளே! கலைமகளே!

4) எல்லோரும் பாடிப் பரவும் பாடல்களும், எல்லாத் துறைகளிலும் இயங்கும் கல்வியும், சொல்லும் ஒவ்வொரு சொல்லும் இனிமையுடன் வலிமை பொருந்தி நிற்கும் பேச்சுத்திறமையும், வடமொழியில் இருக்கும் கடல் போன்ற நூல்களும், இன்பத்தையும் அறிவையும் தேக்கி நிற்கும் செழுமையான தமிழ்ச் செல்வங்களான நூல்களும்,  எனக்கு கிடைத்து நின்று நிலைத்துப் பெருக நீ அருள் புரிவாய்! தொண்டர் செந்நாவில் நின்று காக்கும் கருணைக் கடலே! கலைமகளே!
5) நீண்ட அழகிய இதழ்களைக் கொண்ட தாமரையில் அமர்ந்திருக்கும் மென்மை மிகுந்த அன்னப் பறவையை கொடியாக உடைய பிரம்ம தேவனின் செம்மையான திருநாவையும் உள்ளத்தையும் வெள்ளைத் தாமரையாய் செய்த சிம்மாசனமாகக் கொண்டு வீற்றிருந்தாய் சகலகலாவல்லியாகிய கலைவாணியன்னையே! பஞ்சினைப் போல் இனிமைதரும் மென்மையான உன் திருவடித் தாமரைகள் என் நெஞ்சமாகிய நீர்நிலையில் மலராதது என்ன காரணத்தினால்?

6) இசையும் ஆடலும் எல்லாவிதமான கலைகளும் கல்விகளும்  இனிமையான சொற்கள் நிறைந்து மீண்டும் மீண்டும் பாடும் படியான பாடல்களும் நான் நினைத்தவுடனே எளிதாய் எய்துமாறு அருளுவாய்! நூலைச் செய்தவர் யாருமே இல்லாத வேதங்களும் வான், மண், நீர், நெருப்பு, காற்று என்னும் ஐம்பூதங்களும் உன் அன்பர் கண்களிலும் கருத்தினிலும் நிறைந்தாயே கலைவாணியே!

7) நல்ல பாடல்களும், அதில் நல்ல பொருளும், அந்த பொருளால் நல்ல நல்ல பயன்களும் என்னிடம் இருந்து உருவாகும் படி உன் கடைக்கண்ணால் பார்த்து அருள் புரிவாய். உள்ளத்தில் உறுதியும் தெளிவும் கொண்டு உன் தொண்டர்கள் தீட்டும் கலைத் தமிழ் தீம்பால் அமுதமானது மற்றவர்கள் எழுதும் சுவையில்லாதவற்றிலிருந்து பிரித்துக் காட்டி தெளிவிக்கும் பாலினை நீரிலிருந்து பிரித்துக் காட்டும் வெண்மையான பெண் அன்னமே சகலகலாவல்லியே - எல்லாக் கலைகளையும் அருளும் கலைவாணியே.

8) பேச்சுத் திறமையும் அவதானமும் கவிதைகளை எண்ணிய போதில் சொல்லவல்ல நல்வித்தையும் அருளி என்னை அடிமை கொள்வாய் தாமரையை இருப்பிடமாகக் கொண்டு விளங்கும் செல்வியாம் இலக்குமியின் அருள் அரிதாகப் போய்விட்டதே என்று மனம் வருந்தும் நிலையில்லாமை அருளும் கல்வியெனும் பெரும்செல்வப் பேறே எல்லாக் கலைகளும் வல்லவளே!

9) கவிதைகளிலும் கட்டுரைகளிலும் சொல்லும் சொற்களுக்கும், அவற்றின் பொருட்களுக்கும் உயிராக உள்ளுரைப் பொருளாக இருக்கும் மெய்யான ஞானவடிவாக விளங்குகின்ற உன்னை வணங்குபவர் என்னையன்றி வேறு யார்? நிலத்தில் தோயும்படி இருக்கும் நீண்ட தும்பிக்கையுடைய சிறந்த பெண்யானையும் பறவைகளிலேயே அழகில் சிறந்த ராஜஹம்ஸமாகிய அரச அன்னப் பறவையும் வெட்கும் படியான நடையுடைய திருவடித் தாமரைகளை உடையவளே கலைவாணியே

10) மண்ணுலகில் மன்னர்கள் எல்லாரும் தம் அரசாட்சியின் சின்னமாக வெண்கொற்றக் குடையின் கீழ் சிம்மாசனத்தில் வீற்றிருக்கின்றனர். சிற்றரசர்களின் வெண்குடைகள் பேரரசர்களின் கீழ் அமைகின்றன. அவ்வாறு மண்ணுலகில் உள்ள எல்லா வெண்குடைகளும் தனக்குக் கீழாக பேரரசனாக விளங்குகின்ற மன்னரும் என் பாடல்களைக் கண்டவுடனே தகுந்த மரியாதை கொடுத்துப் பணியும் படி அருள் செய்வாய். படைக்கும் கடவுளான பிரம்மதேவன் முதற்கொண்டு விண்ணில் வாழும் தெய்வங்கள் பலகோடி இருப்பினும் உன்னைப் போல் கண்கண்ட தெய்வம் உள்ளதோ? சொல்லுவாய் கலைவாணியே!

No comments: